January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம்; யாரெல்லாம் தெளிவாக பார்க்க முடியும்?

சுப்பர் மூன் என அழைக்கப்படும் இந்த ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை நிகழவுள்ளது.

சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் என விஞ்ஞான ரீதியாக விளக்கப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றி வந்தாலும் முழு நிலவாக பூமிக்கு மிக அருகில் வரும்போது, ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது.

26 ஆம் திகதி நிகழ உள்ள நீண்ட சந்திர கிரகணம் மதியம், 2:17 மணிக்கு ஆரம்பமாகி இரவு, 7:19 மணிக்கு முடிவடையும்.

சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டு சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும். அதனால் ஒரேஞ் நிறத்திலிருந்து ரத்த சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும்.

இதனை தொலைநோக்கி ஊடாக தெளிவாக பார்க்கலாம்.வானம் தெளிவாக இருந்தால் வெறும் கண்களினாலும் பார்க்க முடியும்.
ஆசியாவில் சில நாடுகள், அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், அண்டார்டிக்கா பகுதியில் முழு சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.

எனினும் இலங்கை, இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் ஒரு பகுதி அல்லது புறநிழல் சந்திர கிரகணம் மட்டுமே தெரியும்.அதுவும், எல்லா பகுதிகளிலும் இதனை காணமுடியாது என கலிலியோ அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் நாகலாந்து,மிசோரம், அசாம், திரிபுரா, கிழக்கு ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சந்திர கிரகணத்தை காணலாம்

ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை சந்திர கிரகணம் ஏற்படக்கூடும்.

இந்த ஆண்டில் இரண்டாவது சந்திர கிரகணம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நடைபெற உள்ளது.