January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அரசாங்கம் அதனை செய்ய வேண்டும்; ரணில் விக்ரமசிங்க

நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அரசாங்கம் அதனை செய்ய வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு முன்னர் நாட்டு மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை)வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் ஒவ்வொரு பகுதிகளாக முடக்குவதால் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்பதை நாம் இப்போது உணர்கின்றோம்.எனவே நாட்டை முடக்கி, தேவையான மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் அமைச்சரவையும் அரசியலமைப்பினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி நோய் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான திட்டங்களை எடுக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையர்களுக்கு சுமார் 30 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றது. அரசாங்கம் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கினாலும், இந்த ஆண்டில் அதனை செய்து முடிக்க இயலாது.

எனவே நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் முதலில் ஈடுபட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

கடந்த ஆண்டு இலங்கை 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை தடுப்பூசி கொள்வனவிற்காக செலவிட்டிருந்தால் இன்று தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கூறினார்.

மத்திய வங்கி பணத்தை அச்சிட்டதாலேயே இலங்கை ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்நிய செலாவணியை அதிகரிப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட அரசாங்கம் இந்திய சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அனுமதித்ததனால் இந்த வைரஸ் மேலும் பரவியது எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.