இலங்கையில் பரவி வரும் கொவிட் -19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்களுக்கு தடுப்பூசிகளை பெற்று கொடுக்கும் நோக்கில் 35 இலட்சம் ‘சினோபார்ம் தடுப்பூசிகளை இந்த வாரம் சீனாவில் இருந்து பெற்று கொள்ளவுள்ளதாக கொவிட் செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மேல் மாகாணத்திற்கும், யாழ்ப்பாணம், குருநாகல், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகளை அதிகளவில் பங்கிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இருக்கும் ஒரே தெரிவு நாட்டில் சகல மக்களுக்கும் தடுப்பூசிகளை ஏற்றுவதாகும்.
அதற்காகவே பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் பெற்று கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் தற்போது சினோபார்ம் தடுப்பூசிகளே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற காரணத்தினால் எதிர்வரும் வாரம் 35 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பெற்று கொள்ளவுள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொத்தமாக 140 இலட்சம் தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ள நிலையில் அவை கட்டம் கட்டமாக இலங்கைக்கு கொண்டு வரப்படும்.
அதில் ஏற்கனவே ஒரு தொகை தடுப்பூசிகளை நாம் பெற்று கொண்டுள்ள நிலையில் தற்போது 35 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.
இதில் ஐந்து இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை ஏற்கனவே முதலாம் தடுப்பூசியாக ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக பெற்று கொடுக்கவுள்ளதுடன், ஏனையவற்றை மேல் மாகாணத்தில் உள்ள மக்களுக்கும், யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மக்களுக்கு பங்கிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலவும் பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதி மக்களுக்கு முதலில் தடுப்பூசிகள் வழங்குவதே முறையான செயற்பாடாகும் எனவும் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.