July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கருப்பு பூஞ்சை தொற்றுக்கு எதிராக நாடு தயாராக இருக்க வேண்டும்’; அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

இந்தியாவில் பரவி வரும் ஆபத்தான ‘கருப்பு பூஞ்சை’ தொற்று இலங்கையில் பரவியிருந்தால் அதற்கு எதிராக நாடு தயாராக வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அத்தோடு இலங்கையின் அம்பாறை பகுதியில் ‘கருப்பு பூஞ்சை’ தொற்று நோய் பரவி வருவதாக ஊடகங்களில் வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என பிரசாத் கொலம்பகே டெய்லி மிரர் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அம்பாறை மாவட்டத்தின் வைத்திய அதிகாரிகளுடன் ஆலோசித்த போதிலும் கருப்பு பூஞ்சை நோய் பரவுவதற்கான உறுதிப்படுத்த எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை என்று அவர் கூறினார்.

எனினும் எமது அயல் நாடான இந்தியாவில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய், இலங்கைக்குள் பரவுவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில், அவ்வாறான ஒரு துரதிர்ஷ்ட நிலைமை ஏற்படுமாயின் அதனை எதிர்த்து போராட நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொவிட் மற்றும் பல்வேறு நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டால் அவர்களால் நோயை எதிர்த்து போராட முடியாது.இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் அவர்கள் ஆபத்தான கட்டத்தை அடையலாம் எனவும் வைத்தியர் தெரிவித்தார்.

“இந்த பூஞ்சை தொற்று சிகிச்சைக்காக பயன்படுத்த ‘ஆம்போடெரிசின் பி’ போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு உள்ளது. எனவே, இதுபோன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்து அவற்றை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்க வேண்டும்,” என வைத்தியர் பிரசாத் கொலம்பகே வலியுறுத்தியுள்ளார்.

“இந்த நோய் பெரும்பாலும் உரம் போன்ற இறந்த உயிர்கலங்களில் காணப்படுகிறது.எனினும் இது மனிதனுக்கு பொதுவாக தீங்கு விளைவிப்பதில்லை.ஆனால் ஒரு மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அளவு குறைவடையும்போது பூஞ்சை தொற்று ஏற்பட்டால் அதன் தாக்கம் அபாயத்தை ஏற்படுத்தும்” என்று மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.