கொரோனா வைரஸ் காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான “கொவிட்-19 சட்டமூலம்” அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காலப்பகுதியில் தவறவிடப்படுகின்ற ஒருசில பிரச்சினைகளை பிற்காலத்தில் நிறைவேற்றுவதற்கு பொது மக்களுக்கு உதவும் வகையில் சட்டத்தை இயற்றுவது மற்றும் கொரோனா தொற்று காலப்பகுதியில் ஒன்லைன் முறையில் வழக்குகளை விசாரிப்பதை சட்டபூர்வமாக்குவது போன்ற பல நோக்கங்களை இந்த சட்டமூலத்தின் ஊடாக பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
எனவே, கொவிட் சட்டமூலம் தொடர்பிலான அனைத்து விடயங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சட்டங்கள் அடங்கிய பல வர்த்தமானி அறிவிப்புகளையும் அரசாங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.