July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் ட்ரோன் கமெரா கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பம்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பிரதேசங்களிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் இன்று (23)முதல் ட்ரோன் கமெரா தொழில்நுட்பம் மூலம் விசேட கண்காணிப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு, அதன் புறநகர் பகுதிகளிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் அதிகளவில் தனிமைப்படுத்தல் விதிகள் மீறுகின்றமை அவதானிக்கப்பட்டதையடுத்து, இந்த ட்ரோன் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் விசேட படையணி மற்றும் அந்தந்த பிரதேச பொலிஸாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் கைது செய்யப்படுவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இது பற்றி கண்காணிப்பதற்கு சுமார் 22 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.