July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வங்காள விரிகுடா தாழமுக்கம் சூறாவளியாக மாற்றம்: இலங்கையில் எச்சரிக்கை!

File Photo: Navy.lk

வங்காள விரிகுடாவில் அந்தமானை அண்மித்த கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை சூறாவளியாக மாற்றமடைந்து வருவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த சூறாவளி நாளைய தினத்தில் படிப்படியாக நகர்ந்து இந்தியாவின் வடக்குப் பிரதேசத்தின் உடாக கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் இலங்கையை சூழவுள்ள கடல் பிரதேசம் கொந்தளிப்பாக இருக்கும் எனவும், இந்தக் காலப்பகுதியில் கடலுக்கு செல்வது ஆபத்தானது என்றும் மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் விரைவாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்குத் செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் பல பிரதேசங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும், இதன்போது வேகமான காற்று வீசக் கூடும் எனவும் இது குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அனர்த்த நிலைமைகள் ஏற்படுமாயின் அதன்போது உடனடியாக செயற்படக் கூடிய வகையில் தேவையான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.