
நாட்டில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தீர்மானம் பல்வேறு தரப்பினரால் எடுக்கப்படுகின்றமை, முறையான ஒருங்கிணைப்பின்மை என்பவற்றால் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சமூக மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தீர்மானங்களை அவசரமாக எடுப்பதால், தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான முறைமையொன்றை அடையாளங்காண முடியாமல் போயுள்ளது. இதனால் தடுப்பூசி செயற்றிட்டம் குழம்பியுள்ளது.
இதற்கமைவாக, நாட்டில் தடுப்பூசி எற்றும் செயற்றிட்டத்தில் காணப்படும் பிரதான சிக்கல்கள் சிலவற்றை சங்கம் இனங்கண்டுள்ளது.
குறிப்பாக,சிக்கல்கள் மற்றும் இறப்புகளைக் குறைக்கும் நோக்கில் குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படும் தடுப்பூசிகளின் அளவு மற்றும் கொரோனா மரணங்களை தவிர்ப்பதற்கான இலக்கிற்கு முன்னுரிமையளித்து எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படாமை
பலவீனமான திட்டமிடலின் காரணமாக கேள்வி மற்றும் விநியோகத்திற்கிடையில் பொருத்தமின்மை
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைக்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில், அநாவசியமானவர்கள் தேவைக்கு மேலதிகமாக இணைத்து கொள்ளப்படுகின்றமை
முன்னறிவித்தலுக்கான தொடர்பாடல் வசதி போதுமானளவு இன்மை
அனைத்து மட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை
என்பனவே அந்த சிக்கல்களாகும்.
மேலும், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு ஊடகங்களினால் வெளி யிடப்படும் அறிவிப்புகள் காரணமாக இதுவரை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த தேசிய நோய் தடுப்பு திட்டத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஆகவே, எந்தவொரு புற அழுத்தங்களுமின்றி தடுப்பூசி திட்டத்தை முன்னெடுப்பதற்கான பொருத்தமான சூழலை, துறைசார் அதிகாரிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை சமூக மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.