November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அறிகுறி இல்லாவிட்டாலும் 60 வயதிற்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்!

60 வயதிற்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் எந்த ஒரு அறிகுறிகளையும் காட்டாவிட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

சிறு நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் இடைநிலை சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அறிகுறி அற்றவர்களை அவர்களின் வீட்டில் தங்க வைப்பதற்கான சூழ்நிலைகள் ஆராயப்பட்டபின்னரே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

அத்தோடு களுத்துறை மாவட்டத்தில், நேற்று (21) முதல் மூன்று நாட்களாக கொரோனா நோயாளர்களை  தனிமைப்படுத்துவது தொடர்பில் புதிய திட்டம் ஒன்று பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை சில தினங்களில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வீட்டில் உள்ள கொரோனா நோயாளிகள் ஏதேனும் சுகயீனம் ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு வரும் எந்தவொரு நோயாளியும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது அவர்களின் பொறுப்பாகும் என்றும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தற்காலிக வசிப்பிடங்களில் இருப்பவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முயற்சிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளதுடன், அவ்வாறு செல்லுதல் நோய் தொற்று பரவுவதற்கு ஏதுவான காரணியாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் பேரழிவுகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகவும், இது குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டு கொண்டுள்ளார்.