இந்தியாவில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுடன் அம்பாறையில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.
இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கருப்பு பூஞ்சை நோய் தொற்று அதிகரிக்குமாயின் நாட்டில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட் வைரஸ் தொற்றாளருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான தொடர்பு குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நோய் குறித்து இந்தியாவிலிருந்து வரும் தகவல்கள் மிகவும் ஆபத்தானவை என்பதுடன் நோய் தீவிரமடையும் தன்மை மற்றும் இறப்பு அதிகரிப்புடன் பூஞ்சை தொற்று தொடர்புடையது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கருப்பு பூஞ்சை தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.