தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான பி.சி.ஆர் மற்றும் துரித அன்டிஜன் பரிசோதனைகளின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இது குறித்து எழுத்து மூல அறிக்கையின் ஊடாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் அசெல குணவர்தனவினால் தனியார் மருத்துவமனைகளின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சிகிச்சைக்கு பொறுப்பான வைத்தியரின் அனுமதி இருந்தால் மாத்திரமே தனியார் வைத்தியசாலைகளில் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டது முதல் பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கும் வரை குறித்த நபர் தனிமைப்படுத்தப்படுமாறு மருத்துவமனையினால் அறிவுறுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அது குறித்து சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவுக்கும் நபருடன் தொடர்புடைய MOH க்கும் அறிவிக்க வேண்டியது தனியார் மருத்துவமனையின் கடமையாகும்.
புதிய வழிகாட்டுதல்களுக்கு அமைய கொரோனா தொற்று உறுதியானவர்களை பொருத்தமான சிகிச்சை மையத்திற்கு அனுப்புவது கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு தனியார் மருத்துவமனையும் மேற்கூறிய வழிகாட்டுதல்களை மீறினால், பி.சி.ஆர் மற்றும் துரித அன்டிஜன் சோதனைகளை மேற்கொள்வதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.