July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் 8 கோடி தடுப்பூசி திட்டம்; இலங்கையும் நன்மையடையுமா?

உலகின் பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் தாமதத்தைக் காட்டுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு மத்தியில் அமெரிக்கா 8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும் இதுவரை எந்தெந்த நாடுகளுக்கு இடையே அமெரிக்கா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கப் போகின்றது என்ற விபரங்கள் வெளியிடப்படாத நிலையில் இந்தப் பட்டியலில் இலங்கை இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் நான்சி வென்ஹோர்ன், ஜூன் மாத இறுதிக்குள் அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் சுமார் 13 சதவீதத்தை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசிகளை உலக நாடுகளிடையே சமமாக பகிர்ந்தளிப்பதை உறுதி செய்யும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவாக்ஸ் திட்டம் மற்றும் பிற கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல் மற்றும் பொது சுகாதார தரவுகளின் அடிப்படையில் எந்த நாடுகள் தடுப்பூசிகளை பெறும் என்பது குறித்து தம்மால் கூறமுடியாது என தெரிவித்துள்ள அவர், இது குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அமெரிக்கா 2-5 மில்லியன் ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க உள்ளதாக இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனம் முன்னதாக தெரிவித்துள்ளது.

இதில் 600,000 டோஸ்கள் ஜூன் மாதத்திற்குள் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.