பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து முடிவு செய்ய மே 25, 26 அல்லது 27 ஆம் திகதிகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துரையாடப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று (சனிக்கிழமை) காலை தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே இராணுவ தளபதி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த வார இறுதியில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்,கொவிட் -19 செயலணி கூடும் போது சுகாதாரத் துறை எழுப்பியுள்ள சில பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கை மருத்துவ சங்கம்,அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட நான்கு மருத்துவ சங்கங்கள் நேற்று வெள்ளிக்கிழமை 14 நாட்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்த நிலையிலேயே இராணுவ தளபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.