முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கு நடவடிக்கையெடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தல் சட்டங்களை மீறியதாகவும் மற்றும் பொதுப் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகவும் ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் கைத் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுதீன், இடம்பெயர்ந்து புத்தளத்தில் இருக்கும் வாக்காளர்களை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக மன்னாருக்கு அழைத்துச் செல்லவென இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 222 பஸ்களை ஈடுபடுத்தியதாகவும், இதற்காக 9.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அமைச்சுப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சீ.ஐ.டியினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையிலேயே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவித்தலை தொடர்ந்து பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய சீ.ஐ.டியினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ரிஸாட் பதியுதீனை கைது செய்வதற்காக பிடியாணையை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் பிடியாணை உத்தரவை பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று சீ.ஐ. டியின் கோரிக்கையை நிராகரித்துள்ள நீதிமன்றம், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பிடியாணை இன்றி பொலிஸாருக்கு சந்தேக நபரை கைது செய்ய முடியுமென்று அறிவித்துள்ளது.