November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ சந்திப்பு

இலங்கையின் பொருளாதாரம் குறித்து தீர்மானித்தல் மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்தகொண்டு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அது தொடர்பான பகுப்பாய்வு குறித்து தெளிவுபடுத்தினர்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், மத்திய வங்கியின் பங்கை முறையாக நிறைவேற்றுமாறும் ஆலோசனை வழங்கினார்.

குறித்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்‌ஷ, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்‌ஷ்மன், மத்திய வங்கியின் துணை ஆளுநர்களான டீ.எம்.ஜே.வை.டீ. பெர்னாண்டோ, கே.எம்.எம்.சிறிவர்தன, எம்.டப்ளிவ்.ஜீ. ஆர்.டீ.நாணயக்கார, பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.