சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தம் கருணாகரம், வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன் மற்றும் வீ இராதாகிருஸ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் எம்.பிக்கள் கையெழுத்திட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தற்போதைய சூழலில் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இந்த விவகாரத்தை விரைவாக கையாள வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில், அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களையும் தமிழ் எம்.பிக்கள் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க கோருவதாக அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.