இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளது.
இலங்கைக்கு சாதகமான வர்த்தக, அபிவிருத்தி கொள்கையுடன் இணங்கும் நாடுகளுடன் சேர்ந்து செயற்படுவதற்கே தாம் எதிர்பார்ப்பதாகவும், அதற்கமையவே சீனாவுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் அரசாங்கத்தின் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியாவினால் நிராகரிக்கப்பட்ட திட்டங்களை சீனா முன்வந்து செய்வதாகவும், இதனால் சீனாவின் பொருளாதார கொள்கையுடன் நாம் பயணிப்பதே எமக்கு பயனுள்ளதாக இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடத்தப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மிகவும் தெளிவானது.எந்தவொரு நாட்டுடனும் முரண்படும் கொள்கையில் செயற்பட நாம் தயாராக இல்லை. சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையுடன் நெருக்கமான நட்புறவை கொண்டுள்ள போதும் வர்த்தக, அபிவிருத்தித் திட்டங்களில் எமக்கு சாதகமான நாடுகளுடன் நாம் இணைந்து பயணிக்கின்றோம். சீனாவுக்கு முன்னுரிமை கொடுப்பதாக சில விமர்சனங்கள் எழுந்தாலும் கூட அதில் உண்மையில்லை” என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து, தெற்கின் கடல் ஆதிக்கத்தை பலப்படுத்த வேண்டும் என இலங்கை தீர்மானித்த போது, முதலில் இந்தியாவுடனேயே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இந்திய அரசாங்கம் இதற்கு இணக்கம் தெரிவிக்காததால், அவர்களுக்கு அதன் அவசியம் இருக்கவில்லை என்பது புரிந்துகொள்ளப்பட்டது. அதன் பின்னரே சீனா- ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை கையில் எடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கை வந்த சீன உயர்மட்டக் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் விசேட கலந்துரையாடல்களை நடத்தியுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார விடயங்கள் தொடர்பாக இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.