துறைமுக நகர் இலங்கையின் அதிகார எல்லைக்குள்,நீதிமன்ற கட்டமைப்பின் கீழ் இயங்குமென அரசாங்கம் கூறிக்கொண்டிருந்தாலும் இலங்கையின் எல்லையை தாண்டிய சீனாவின் பிராந்தியமொன்றே கொழும்பு துறைமுக நகரில் உருவாக்கப்பட்டு வருவதாகவும், எமது கோரிக்கைகளை ஈழம் என கூறிய ஆட்சியாளர்கள் இன்று கொழும்பிற்கு அப்பால் சீனாவின் சீலம் உருவாக இடமளித்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்;
கொவிட் -19 வைரஸ் பரவல் மிகவும் மோசமான நிலைமையை ஏற்படுத்திக்கொண்டுள்ள இந்த நிலையில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதத்தை நடத்துவதற்கு முதலில் எனது எதிர்ப்பை வெளிப்படுத்தி கொள்கின்றேன்.
துறைமுக நகர் திட்டத்தின் பின்னர் இலங்கைக்குள் எல்லைத்தடை தொடர்ந்தும் நீடிக்கின்றது.இலங்கைக்குள் இருந்து கொண்டு செல்லும் பொருட்கள் சுங்கத்தினால் பரிசோதிக்கப்படுவதுடன் வரிகளும் அறவிடப்படுகின்றன.எனவே இது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கப்போகின்றது.
துறைமுக நகர் இலங்கையின் பகுதியென அரசாங்கம் கூறினாலும் அவ்வாறு இல்லாது வேறு ஒரு நாட்டின் அல்லது பிராந்திய எல்லையாக இது உருவாவதாகவே எமக்கு தெரிகின்றது.
ஆட்சியாளர்கள் ஈழம் குறித்து பேசிக்கொண்டு இருந்தீர்கள். ஆனால் இன்று ‘சீலம்’ ஒன்று உருவாகிக்கொண்டுள்ளது. நீதிமன்ற கட்டளைகளுக்கு கட்டுப்படாத இலங்கைக்கு அப்பால் சீனாவுக்கு சொந்தமான பூமி ஒன்றே உருவாகிக்கொண்டுள்ளது. இதற்கான விளைவுகளை எப்போதாவது அனுபவிக்க வேண்டி வரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.