கொழும்பு துறைமுக நகரத்தின் மூலமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு புதிய கதவு திறக்க போவதாகவும்,இதற்கு முதல் எப்போதும் இல்லாத அளவிற்கு வாய்ப்புகள் இந்த திட்டத்தின் மூலமாக கிடைக்க போவதாகவும் சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஏனைய நாடுகள் சீனாவைக்கண்டு அஞ்சுவதைப்போல் நாம் அச்சங்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்;
கொழும்பு துறைமுக நகர் உருவாக்கம் மற்றும் அதற்கான ஆணைக்குழு குறித்து கற்பனைக் கதைகளை கூறிக்கொண்டு மக்களை குழப்பும் நடவடிக்கைகளை சிலர் எடுக்கின்றனர். ஆனால் இந்த திட்டத்தின் மூலமாக இலங்கைக்கு 15 பில்லியன் டொலர் வருவாயை பெற்றுக்கொடுக்கும் வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார கொள்கைகள், முதலீட்டு கொள்கைகள் மாறுபட்டு வருகின்ற இந்த காலகட்டத்தில் உடனடியாக தீர்மானங்கள் எடுக்கவும், விரைவாக பயணிக்கவும் ஆணைக்குழு எமக்கு அவசியம். எனவே அதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதும் அவசியமாகும்.
சீன காலனித்துவமோ, அல்லது சர்வதேசத்தை பகைத்துக்கொள்ளும் திட்டமோ இதுவல்ல.அவற்றை தாண்டிய எதிர்கால நோக்கத்துடன் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, உலக முதலீட்டாளர்களை இலங்கையின் பக்கம் ஈர்க்க வேண்டுமாயின் அதற்கான ஒரே வழிமுறை பலமான முதலீட்டு நகரை உருவாக்குவதாகும்.எனவே சீன மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான போராட்டத்தை எம்முடம் தொடர்புபடுத்தி குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.