October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை பிரஜைகளில்லாத இனக்குழு துறைமுக நகருக்குள் குடியேறுவதால் இறையாண்மைக்கும் சுயாதீனத்திற்கும் அச்சுறுத்தல்’

கொழும்பு துறைமுக நகருக்குள் இலங்கை பிரஜைகள் இல்லாத இனக்குழுவொன்று குடியேறவுள்ளதாகவும், சீனர்களே இவ்வாறு இலங்கையின் எல்லைக்குள் குடியமரவுள்ள காரணத்தினால் இது இலங்கையின் சுயாதீனத்திற்கும், இறையாண்மைக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையப்போகின்றதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு பாராளுமன்றத்துடன் முரண்படும் நிலையில் அரசாங்க பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) முன்னிலையில் கொண்டுவர முடியுமா என கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அரசாங்கத்தினால் வழங்க முடியாது.ஏனென்றால் ஆணைக்குழுவை பாராளுமன்ற குழுக்கள் முன்னிலையில் கொண்டுவர முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவானவுடன் இந்தியாவிற்கு விஜயம் செய்த வேளையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றமை தவறான செயற்பாடு, நாம் உடனடியாக இந்த தவறை சரிசெய்வோம் என இந்திய ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். ஆனால் ஹம்பாந்தோட்டையை வழங்கியமை சரியென இன்று கூறுகின்றனர்.எனவே இதில் அரசியல் மற்றும் ஒரு குடும்பம் சார்ந்த வியாபாரமொன்றே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் அவர் மேலும் தெரிவித்தார்.