
கொவிட் சவாலை வெற்றிகொள்வதற்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுப்பெற வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று ஜப்பானில் ஆரம்பமான ‘ஆசியாவின் எதிர்காலம்’ 26 ஆவது சர்வதேச மாநாட்டில் இணையவழியில் உரையாற்றும் போது, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகளுக்கு இடையே உறவுகளும் புரிந்துணர்வும் வலுப்பெறுவது காலத்தின் தேவையாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக உலக நாடுகளில் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்த ஒரு இனத்தவரும் எதிர்பார்த்து இருக்காத நிலையில் எதிர்கொண்டுள்ள கொரோனா சவாலை அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து, புரிந்துணர்வுடன் வெற்றிகொள்வதற்கு கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.