
கொழும்பு துறைமுக நகரத்தின் விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் 148 வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்றும் இன்றும் நடைபெற்ற நிலையில், விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 148 பேரும் எதிராக 59 பேரும் வாக்களித்தனர்.
இதில் ஆளும் கட்சியினர் ஆதரவாக வாக்களித்ததுடன், எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் வாக்களித்தன.
துறைமுக நகர விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தில் சில விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் இதனால் அவற்றை நிறைவேற்ற வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்வை நடத்த வேண்டுமெனவும் உயர்நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட அரசாங்கம், சர்வஜன வாக்கெடுப்புக்கான விடயங்களை தவிர்ந்த மற்றைய விடயங்களை திருத்தங்களுடன் சாதாரண பெரும்பான்மை வாக்குகளில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளது.
வாக்கெடுப்பின் போது, 207 பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். இவர்களில் ஆளும் கட்சியினருடன் இணைந்து ரிஷாட் பதியுதீனின் கட்சியை சேர்ந்த அலிசப்ரி ரஹீம் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். ஆனால் ரிஷாட் பதியுதீன் சட்டமூலத்திற்கு எதிராகவே வாக்களித்தார்.
அத்துடன் பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தந்திருந்தவர்களில் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட 5 பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.
இதேவேளை இரா.சம்பந்தன், விஜேதாச ராஜபக்ஷ, முஜிபூர் ரஹ்மான், ஹரீன் பெர்னாண்டோ, ராமேஸ்வரன் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கவில்லை.