January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இங்கிலாந்தை போல் ஒரு மாதத்துக்கு நாட்டை மூடினால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்’; ரணில் விக்ரமசிங்க

நாட்டில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி இருக்கும் நேரத்தில், தடுப்பூசிகளை தேடுவதில் நேரத்தை செலவிடாமல் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேபோல, இங்கிலாந்தை போல ஒரு மாதத்துக்கு நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்தினால் கொரோனாவை இலகுவில் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க இங்கிலாந்து ஒரு மாதமாக மூடப்பட்டது. எனவே, கொரோனா வைரஸ் மற்றொரு நபருக்கு தொற்றுவதை தடுப்பதற்கு குறைந்தது இரண்டு வாரங்களாவது நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விடும் என தெரிவித்து நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பிக்காமல் இருப்பதில் எந்தவொரு பயனும் இல்லை.ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் பாரியை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதற்குமுன் பொருத்தமில்லாத காலத்தில் தான் நாட்டை மூடினார்கள். ஆனால் தற்போது நாடு மூடப்பட வேண்டிய நேரத்தில் திறந்து இருப்பதால் எந்தவொரு பயனும் கிடைக்கப் போவதில்லை.

எனவே, கொரோனா தொற்று நோய் வேகமாக பரவுவதால், தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தற்போது தடுப்பூசிகளை தேடுவதில் நேரத்தை வீணடிப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை.

உடனடியாக செய்ய வேண்டியது நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதாகும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க குறைந்தது இரண்டு வாரங்களாவது நாடு மூடப்பட வேண்டும்.

நாடு மூடப்பட்ட காலகட்டத்தில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின்படி ஒருநாள் நாட்டைத் திறப்பதில் தவறில்லை. நாட்டை ஒரு மாதத்திற்கு முழுவதுமாக மூடி வைத்துத்தான் இங்கிலாந்து கொரோனா வைரஸைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நான் ஆரம்பத்தில் சொன்னது போல ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், அது தற்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டிருக்கும்.

இதில் அமெரிக்கா இதுரை 6 மில்லியன் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு வழங்கியுள்ளது. அதேபோல, 20 மில்லியன் மொடானா மற்றும் பைசர் தடுப்பூசிகளையும் இவ்வாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. இவையனைத்தும் இலவசமாக தான் வழங்கப்பட்டது.

சீனா 250 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கியது. அல்லது விற்பனை செய்தது. சீனாவில் 65 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தத் தடுப்பூசி ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தால் ஹலால் சான்றிதழுடன் தயாரிக்கப்படுகிறது.

மியான்மரும், பங்களாதேஷும் முன்கூட்டியே தடுப்பூசிகளை இறக்குமதி செய்து உரிய காலத்தில் அவற்றை பெற்றுக் கொண்டன.

ஆகவே, எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லாத எமது அரசாங்கத்தால் சரியான நேரத்தில் தடுப்பூசிகளையாவது இறக்குமதி செய்ய முடியாமல் போய்விட்டது. பொருளாதாரம் பல நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை கருத்தில் கொள்ளுமா என்று என்னால் கூற முடியாது. இந்த நாட்டில் தடுப்பூசி செலுத்துவதற்கு 200 மில்லியன் டொலர் மட்டுமே செலவாகும். அந்தத் தொகையைக் கண்டுபிடிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்று ரணில் விக்ரமசிங்க மேலும் கூறினார்.

இதனிடையே, சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை குறித்து விரிவாக பேசப்பட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.