January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டுமானால் வீதிகள் வெறுமையடைய வேண்டும்’

நாட்டில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முழுவதுமாக பூட்ட வேண்டும் என தாம் பரிந்துரைப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் வைத்தியசாலைகளின் படுக்கைகள், அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஒட்சிசன் தேவை என்பன அதிகபட்ச திறனை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்றை தினம்(19) நாட்டில் 3500க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இதனைப் போன்று மூன்று மடங்கான தொற்றாளர்கள் நாட்டில் இருப்பார்கள் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டார்.

அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த மற்றைய நேரங்களில் மக்களை வீட்டில் இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் மக்கள் அவ்வாறு நடந்து கொள்வதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமானால் வீதிகள் வெறுமையடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், அரச அதிகாரிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப பணியாற்ற வேண்டும் என கூறியதுடன், கொரோனா தொற்று நிலவரங்கள் குறித்த உண்மை தகவல்களை மறைக்க முயன்றால் தாமும் அதனுடன் சேர்ந்து மறைத்து விட நேரிடும் எனத் தெரிவித்தார்.