அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்துவதற்கு 5 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை செலுத்துவதற்காக கட்டணம் அறவிட்டமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர், இரண்டாவது டோஸை செலுத்துவதற்கான அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளின் கையிருப்பு குறைவாகவுள்ளது. இவ்வாறு, 50 ஆயிரத்துக்கும் குறைவான தடுப்பூசிகளே உள்ளன.
எனவே, அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிக்கான கேள்வி நிலவுவதால் அவற்றை 5 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சிடம் கோரிக்கையொன்றையும் அவர் முன்வைத்துள்ளார்.