November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சகல நிறுவனங்களும் ஊழியர்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிக்க வேண்டுமென்று அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் ஊழியர்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் வசிப்பிடங்கள் உள்ளிட்ட அவர்களது தனிப்பட்ட தகவல்களை நிறுவனங்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டியது அவசியமானது என்று கருதப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 3 தினங்களுக்குள் ஊழியர்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அஜித் ரோஹண

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் அண்மையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அங்கு மற்றைய ஊழியர்களிடையே நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்த நிலைமையில் அந்த நிறுவனத்திடம் தமது ஊழியர்களின் சுயவிபரங்கள் இருக்காமையினால், அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

அதேபோன்று தற்போது மேலும் சில நிறுவனங்களில் கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம் என்று அஞ்சப்படுகின்றது. இதனால் அனைத்து நிறுவனங்களும் தமது ஊழியர்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய பட்டியலை வைத்திருப்பது அவசிமானது என்று உணரப்பட்டுள்ளது.

இதேவேளை மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியில் செல்லும் போது தாம் சந்தித்த நபர்கள், பயணித்த வாகனங்கள், சென்ற இடங்கள் உள்ளிட்ட தகவல்களை பதிவில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.