
ஒரு நாட்டிலே இன்னொரு நாடு என்று கூறும் அளவுக்கு கொழும்பு துறைமுக நகரத்தின் பொருளாதார ஆணைக்குழு அதிகாரங்களை கொண்டிருக்கின்ற நிலையில், இப்பொருளாதார ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருப்பது போல வடக்கு,கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்கியிருந்தால், அங்கு ஓடிய இரத்த ஆறை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆயுதப் போராட்டத்தினூடாக எமது இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் தொடர்பில்,பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் என்ற சொற்களை எல்லா அரசாங்கங்களும் பயன்படுத்துகின்றன. வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீகம் சிதைக்கப்படுகின்றது. வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் அகழ்வாராய்ச்சி என கூறிக்கொண்டு நிலங்கள் பறிக்கப்படுவதோடு, தமிழர் நிலங்களின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒரு நாட்டிலேயே இன்னொரு நாடு என்று கூறும் அளவுக்கு கொழும்பு துறைமுக நகரத்தின் பொருளாதார ஆணைக்குழு அதிகாரங்களை கொண்டிருக்கின்ற நிலையில்,அதிகாரப் பரவலாக்கத்தை தமிழர்கள் கேட்கும்போது அவர்கள் பயங்கரவாதிகளாக்கப்படுகிறார்கள்.அதிகாரம் பரலாக்கப்படும்போது, நாடு பிரிந்து போகும்.எனவே பிரிவினைவாதிகள் என்று கூறுகிறார்கள்.இப்பொருளாதார ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருப்பது போல வடக்கு,கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்கியிருந்தால்,அங்கு ஓடிய இரத்த ஆறை தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.
இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.ஆனால் இந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்காது, வெளிநாட்டுப் பணங்களுக்காக அரசாங்கம் நாட்டை அடைமானம் வைக்கிறது.நாட்டை நேசிக்கின்ற, நாட்டுக்காக குரல்கொடுக்கின்ற அனைவரும் இதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.