இலங்கையை சிங்கள பெளத்த நாடெனக் கூறிக்கொண்டு வடக்கு, கிழக்கில் தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த இலங்கையையும் சீனா ஆக்கிரமிக்க போவதாகவும் அதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கமே வழங்கியுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறியதுடன், துறைமுக திட்டத்தின் விளைவுகள் வெகு விரைவில் வெளிப்படும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்;
கொழும்பு துறைமுக நகர் திட்டத்தில் இலங்கையின் பங்கு என்ன? இலங்கை பாராளுமன்றத்தின் பங்கு என்ன? பண பரிவர்த்தனைகள் மத்திய வங்கியின் ஊடாகவா கையாளப்படப்போகின்றது என்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கை அரசாங்கத்தினால் துறைமுக நகர் உருவாக்கப்பட்டிருந்தால் அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்கினை வகித்திருக்கும். ஆனால் சீனாவின் ஒரு தனியார் நிறுவனத்தின் ஆதிக்கத்தில் உருவாக்கப்படும் துறைமுக நகர் மூலமாக இலங்கை அரசாங்கத்தினால்,பாராளுமன்றத்தால் கொழும்பு துறைமுக நிருவாகத்தை கட்டுப்படுத்த முடியாது போகும். இப்போது உருவாக்க முயற்சிக்கும் ஆணைக்குழு உறுப்பினர்கள் சீனர்களாக கூட இருக்கலாம்.
இலங்கையானது சிங்கள பௌத்த நாடு எனக் கூறிக்கொண்டுள்ள நிலையில், இந்த விடயத்தில் ஏன் திட்டமிடல் இல்லாது போனது. வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழர் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர். அனுராதபுரத்தின் ஒரு சில சிங்கள பகுதிகளை வவுனியாவுடன் இணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழர் பகுதிகள் அழித்து சிங்கள ஆக்கிரமிப்பை முன்னெடுக்கும் அதேவேளை, இலங்கையை சீனா ஆக்கிரமிக்கின்றது. அதற்கான அனுமதியை கொடுக்கும் சட்டமூலம் நிறைவேறும். அதன் பின்னர் இலங்கை பாராளுமன்றத்திற்கும் துறைமுக நகருக்குமான தொடர்புகள் முடிகின்றது. ஜனாதிபதியே அடுத்த கட்ட நடவடிக்கைகளை கையாள்வார். ஆணைக்குழு உறுப்பினர்கள் யார் என்பதெல்லாம் கேள்விக்குறியான விடயமாகும். கொழும்பு துறைமுக நகர் திட்டத்தின் போது உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளோம். இதன் விளைவுகள் எதிர்வரும் காலங்களில் இராஜதந்திர நகர்வுகளில் வெளிப்படும்.
எனவே சிங்கள,பெளத்த நாடு என கூறிக்கொண்டுள்ள நிலையில் துறைமுக நகர் திட்டத்துடன் இந்த அடையாளங்களை இழக்க நேரிடும் எனவும் அவர் மேலும் கூறினார்.