January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ் மக்களுக்கு சமாதானத்தை பெற்று கொடுத்ததால் தான் என்னை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொண்டார்கள்’

முழு நாட்டுக்கும் அமைதியையும், சமாதானத்தையும் பெற்று கொடுக்கவும்,வடக்கு,கிழக்கு மக்களுக்கும் அமைதி, சமாதானத்தை பெற்று கொடுக்கவுமே நாம் யுத்தத்தை நடத்தினோம்.அதற்காகவே தமிழ் மக்கள் என்னை ஜனாதிபதி வேட்பாளராக அங்கீகரித்தனர் என சபையில் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா, விடுதலைப்புலிகள் தமிழர்களுக்காக போராடினர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழர்களுக்காக அவர்கள் போராடியதற்காக ஏனைய இனத்தவரை கொல்வது நியாயமா எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் விசேட அனுமதியுடன் யுத்த வெற்றி குறித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்;

விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த எமது பாதுகாப்பு படையினருக்கு நாம் நன்மதிப்பை வழங்க வேண்டும். அவர்களின் சேவைகளை நாம் போற்ற வேண்டும்.மேலும் இந்த யுத்தத்தில் 23 ஆயிரம் விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதுடன், 12 ஆயிரம் புலிகளை கைது செய்து அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி விடுவித்துள்ளோம்.முழு நாட்டுக்கும் அமைதியையும், சமாதானத்தையும் பெற்று கொடுக்கவும்,வடக்கு, கிழக்கு மக்களுக்கு அமைதி, சமாதானத்தை பெற்றுக்கொடுக்கவுமே நாம் இந்த யுத்தத்தை நடத்தினோம்.அதனாலேயே 2010 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் என்மீது வெறுப்பை வெளிப்படுத்தாது எனக்காக வாக்களிக்க முன்வந்தனர்.

எனினும் வருத்தத்துடன் ஒரு விடயத்தை நான் கூற நினைக்கின்றேன். விடுதலைப்புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினர் என சபையில் சிலர் கூறினர். தமிழ் மக்களுக்காக போராடினார்கள் என்பதற்காக ஏனைய இனத்தின் மக்களை கொலை செய்ய, தலதாமாளிகை, ஸ்ரீமாபோதி ஆகிய வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்த, பெளத்த தேரர்களை கொலை செய்ய,கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி தாய்மார்களை கொலைசெய்ய முடியுமா?அதற்கு அனுமதிப்பீர்களா என குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தரவும் அரசியல் செய்யவும் கூடிய சூழலை உருவாக்கிக்கொடுத்தது எமது இராணுவம் போராட்டத்தை வெற்றி கொண்டதால் என்பதையும் நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.