July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் நியூமோனியாவால் பாதிக்கப்பட்ட 1000 பேர் மருத்துவமனைகளில் அனுமதி!

கொவிட் நியூமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய தொற்று நோயியல் ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொரோனா பரவல் நிலைமையைப் பொறுத்தவரை இலங்கை ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இப்போதே சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அடுத்த மூன்று, நான்கு வாரங்களில் ஒரு பெரிய பேரழிவில் முடிவடையும்.

அதன்படி, மக்கள் முகக்கவசங்களை சரியாக அணிய வேண்டும், கை சுத்திகரிப்பானை பயன்படுத்த வேண்டும், கைகளை சரியாகக் கழுவ வேண்டும், உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க வேண்டும். பெரிய கூட்டங்களை தவிர்ப்பதும் முக்கியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொவிட் நியூமோனியாவால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்பட்டாலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கின்ற போது நியூமோனியா அதிகரிப்பினால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பிற நோய்கள் காணப்படுகின்ற நோயாளிகள் மரணிக்கும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

எனவே, இந்த வைரஸ் ஒரு கொடிய வைரஸ் என்றும், அடிக்கடி கை கழுவுதல், சரியான முகக்கவசங்களை அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலம் இதைத் தடுக்க முடியும் என்று அவர் கூறினார்.