July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொழும்பு துறைமுக நகரத்தில் முதல் 5 ஆண்டுகளில் 2 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்’; பிரதமர் நம்பிக்கை

கொழும்பு துறைமுக நகர கட்டுமான பணிகளின் ஊடாக முதல் 5 ஆண்டுகளில் சுமார் இரண்டு இலட்சம் வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க முடியும் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ நம்பிக்கை வெளியிட்டார்.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,` இதில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை பெற்று கொள்ள வாய்ப்புள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

முதல் ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக சுமார் 83,000 புதிய நிரந்தர வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வாய்ப்பு கிட்டும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த துறைமுக நகரத்தில் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளில் குறைந்தது 75 சதவீதமாவது இலங்கையர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற திருத்தத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக கூறிய அவர், இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு தேவையான சிறப்பு திறன்கள் இல்லாத சில சந்தர்ப்பங்களில், இந்த திருத்தத்தில் தளர்வினை ஏற்படுத்த ஆணையத்திற்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

”இந்த புதிய துறைமுக நகரத்தின் அடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை நாட்டிற்கு ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு தேவையான சட்ட மற்றும் வணிக வசதி கட்டமைப்பை இன்று நாம் இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக நிறுவுவோம்” என்றார்.

இந்தச் சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றம் வழங்கிய அனைத்து வழிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் இரண்டாவது வாசிப்பில் இணைத்து கொள்ள எதிர்பார்க்கும் அதேவேளை, நாடடு மக்களதும் சகோதர கட்சிகளின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ சபையில் தெரிவித்தார்.