குறைந்த விலையில் அதிநவீன ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் வழங்கப்படும் என வாக்குறுதியளித்து வாடிக்கையாளர்களிடம் இருந்து 12 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்கள் வாயிலாக விளம்பரங்கள் செய்து மேற்கொள்ளப்பட்ட இந்த மோசடி தொடர்பிலான விபரங்களை தனியார் தொலைக்காட்சியொன்று சமீபத்தில் வெளியிட்டது.
இதன்படி, இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட 300 இற்கும் மேற்பட்டோர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனிடையே, குறித்த சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில், இதுவரை கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த நபர்களால் 12 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சிறப்பு பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை முறைப்பாடு செய்யாத யாராவது இருந்தால் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு வந்து உடனடியாக முறைப்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.