
இலங்கை வர முடியாது இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையர் குழு ஒன்று சுகாதார அமைச்சின் சிறப்பு அனுமதியுடன் இன்றைய தினம் (புதன்கிழமை) நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவ தேவை உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கையர்கள் குழு ஒன்றே இவ்வாறு இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பணிபுரியும் இந்திய அதிகாரிகள் குழு ஒன்றுடன் புது டில்லியிலிருந்து இலங்கை வந்த ஏர் இந்தியா விமானத்தில் தம்மை நாட்டிற்கு திரும்ப அனுமதிக்குமாறு அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை வந்த 16 இந்தியர்களும் இலங்கையர்கள் குழுவும் இலங்கை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
மே 6 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்குள் இந்தியா சென்றவர்கள் உட்பட இந்தியாவிலிருந்து வரும் எவருக்கும் இலங்கை அரசு பயணத்தடையை அறிவித்தது.
புதிய கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.