November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஒரேநாளில் 34 கொரோனா மரணங்கள் பதிவு; இந்தியாவின் நிலையை நெருங்குவதாக எச்சரிக்கை!

இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 34 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதையடுத்து நொட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்தோடு இலங்கையில் 2,478 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 147,680 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் ஒன்பதாவது நாளாகவும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 ஐ தாண்டி பதிவாகியுள்ளது.

முதல் தடவையாக கொரோனா மரணங்களின் தினசரி எண்ணிக்கை 30 ஐ கடந்து பதிவாகியுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது.

இதனிடையே இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையுடன் மருத்துவமனைகளின் படுக்கை மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கும் திறன் என்பன இந்தியா இப்போது எதிர்கொள்ளும் சூழ்நிலையை நோக்கி நாட்டை கொண்டு செல்வதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) பொதுக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் வெகுவாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளர்களை அனுமதிக்கும் திறன் அதிகபட்ச அளவைத் தாண்டிவிட்டதாகவும் சுகாதாரத் துறையினரால் நிர்வகிக்க முடியாத நிலையை எட்டிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, உறுதியான திட்டங்களை வகுப்பதுடன் நிலைமையை கட்டுப்படுத்த பொதுமக்கள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் சுகாதாரத் துறையினருடன் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டு கொண்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் லேசான அல்லது அறிகுறியற்ற நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்தும் படியும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே தற்போதைய நிலைமைகளின் படி அடுத்த 100 நாட்களுக்குள் இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக பதிவாகும் வாய்ப்புள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான 25,791 பேர் கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,516 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 121,145 ஆக பதிவாகியுள்ளது.