ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் இன்று இடம்பெற்றது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற பரிந்துரை சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டப்பட்டது.
அதன்போது, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேடமாக தெளிவுபடுத்தினார்.
அத்தோடு, துறைமுக நகரத்துடன் தொடர்புடைய பொருளாதார நன்மைகள் மற்றும் மதிப்புகள் குறித்து இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஆளும் கட்சியினருக்கு விளக்கமளித்தார்.
இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதேநேரம், கொழும்பு போர்ட் சிட்டி ஆணைக்குழு சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள திருத்தங்களை மேற்கொண்டு, மே மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.