முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படுவதையும் இலங்கை அரசாங்கம் சிறுபான்மை சமூகங்கள் மீது கடைபிடிக்கும் அணுகுமுறைகளையும் அனுமதிக்க முடியாது என்று உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கையின் யுத்த நிறைவின் 12 ஆண்டை அனுஷ்டிக்கும் முகமாக உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் நினைவிடங்களை அழிப்பது நாட்டின் நற்பெயரை சர்வதேசத்தில் மோசமாக்கும் என்பதை சிங்கள மக்கள் அறிந்தும், அமைதி காப்பதாகவும் உலகத் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதார அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கத்துடனான நடவடிக்கைகள் அவசரமாகவும், முக்கியமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளை தமிழ் மக்களும் அரசியல் தலைவர்களும் இலங்கையில் உள்ள சமூகங்கள் மற்றும் சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான மூலோபாய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
பல தசாப்த கால போராட்டத்தில் தமிழ் சமூகத்தின் பெரும் பகுதியினர் மேற்கொண்ட தியாகங்கள் மற்றும் எதிர்கொண்ட துன்பங்களை தமிழ் சமூகம் மறந்துவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள உலகத் தமிழர் பேரவை, இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களாகின்ற போதிலும், இலங்கை அதன் கடந்த காலத்தை புரிந்துகொள்ளாமல் இருப்பதையிட்டு, உலகத் தமிழர் பேரவை கவலை தெரிவித்துள்ளது.
‘இலங்கை அரசாங்கம் இராணுவம் மேற்கொண்ட யுத்த குற்றங்கள் மற்றும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளின் காரணமாக ஆயுத மோதல் ஏற்பட்டது’ என்பதை தொடர்ந்தும் மறுத்து வருவதாகவும் குறித்த பேரவை குற்றம்சாட்டியுள்ளது.