இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து வடக்கில் பல இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
அந்த வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள் சிலர் அங்குள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அதேவேளை யாழ். மாநகர சபையில் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
அங்கு விளக்குகளை ஏற்றி மாநாகர உறுப்பினர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்திலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தனது இல்லத்திலும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நந்திக்கடல் பகுதியிலும், வேலர் சுவாமிகள் முள்ளிவாய்க்காலிலும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேங்கள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதியில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.