வடக்கு கிழக்கு மக்களின் அகதி வாழ்க்கை யுகத்தை தாம் முடிவுக்குக் கொண்டுவந்ததாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவின் நினைவு தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளாக அனாதை இல்லங்களில், குழந்தைகள் எத்தருணத்திலேனும் கொல்லப்படலாம் என அச்சத்தில் வாழ்ந்த வாழ்ந்த வடக்கு- கிழக்கு மக்கள் தமது வீடுகளுக்கு சென்று கௌரவமாக வாழ்வதற்கு தாம் வழியமைத்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றி என்பது நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் கிடைத்த வெற்றி அல்ல என்றும் பயங்கரவாதிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
தமது பிள்ளைகளை போரில் ஈடுபடுத்தாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்பி இருப்பதால், இந்த வெற்றி வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கும் சொந்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் வந்த மக்கள் பிரதிநிதிகளை விடுதலைப் புலிகள் ஆரம்பமாக இலக்கு வைத்ததாகவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றியின் காரணமாக இன்று வடக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபை தேர்தல் மற்றும் பொது தேர்தல் ஆகியவற்றை சுதந்திரமாக நடத்த முடியுமாக இருப்பதாகவும் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றம் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அன்று போருக்கு சென்ற எவரும் இனப்படுகொலை நிகழ்த்துவதற்காக அங்கு செல்லவில்லை. அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக ஆகியோர் இனப்படுகொலை நிகழ்த்துவதற்காக தங்களது படைகளை வழிநடத்தியவர்கள் அல்ல.
வடக்கின் அப்பாவி பிள்ளைகள், தாய், தந்தையர், அச்சமடைந்த மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி போராடிய காட்டுமிராண்டித்தனமான குழுவிற்கு எதிராகவே அவர்ககள் போராடினார்கள்.
அம்மக்களை காப்பாற்றி பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுவதே எங்கள் நோக்கமாக இருந்தது.
அது இராணுவத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு கடினமான சவாலாகும். அவர்கள் அதை செய்தார்கள்.” என்றும் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.