
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தாமல், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் திருத்தத்தை நிறைவேற்ற நடவடிக்கையெடுப்போம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி எதிர்த் தரப்பினரால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான தீர்ப்பு ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு திருத்தத்தில் சில சரத்துகளை நிறைவேற்ற வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவும் வேண்டும் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக இன்று கொழும்பில் அரசாங்கத்தின் தலைமை கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அரசாங்கத்திற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.
“நீதி மன்றத்தின் தீர்ப்பு என்ன என்பது பற்றி வரும் 20 ஆம் திகதி சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்த பின்னர் புதிய திருத்தம் தொடர்பான விவாதம் நடக்கும். அதில் குழுநிலையின் போது தேவையான திருத்தங்களை முன்வைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.