தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் காலமானார்.
கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு காலமானதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்கும் போது இவருக்கு 80 வயதாகும்.
மூதூர், சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட துரைரட்ணசிங்கம், பாடசாலைகள் பலவற்றில் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியுள்ளதுடன் பின்னர், திருகோணமலை பிராந்தியக் கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், அதனை தொடர்ந்து தம்பலகாமம் கோட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
இவர் 2001 பாரளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். அதில் அவர் வெற்றிப்பெறாத போதும், தேசியப் பட்டியல் உறுப்பினர் மு.சிவசிதம்பரம் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக 2002 ஜூன் மாதத்தில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டில் போட்டியிட்டு அதில் வெற்றியடைந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினார்.
இதன்பின்னர் 2015 பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதில் தோல்வியடைந்த போதும், கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.