May 24, 2025 2:25:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவில் ‘மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள்’ ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மரக்கடத்தல் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் இருவர் முறைப்பாடு செய்துள்ளனர்.

முல்லைத்தீவு – முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் நடந்துவருவதாக தமக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்றிருந்த போதே, மரக் கடத்தல்காரர்களால் தாம் தாக்கப்பட்டதாக ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் மற்றும் சண்முகம் தவசீலன் ஆகியோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக மரக்கடத்தல்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக நடந்துவரும் இந்த மரக்கடத்தல் நடவடிக்கைகளுடன் சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஊடகவியாளர்கள் மீதான தாக்குதலுக்கு யாழ். ஊடக அமையம், வவுனியா தமிழர் ஊடகவியலாளர் சங்கம், கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் சங்கம் என்பன கண்டனம் வெளியிட்டுள்ளன.