July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரயில்வே ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்ற உறுதியையடுத்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் ரயில்  கட்டுப்பாட்டாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு உறுதியளிக்கப்பட்டதையடுத்து ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

இதனையடுத்து, இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணி முதல் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருவதாக ரயில்  இயந்திர சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் ரயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இன்று காலை மருதானை ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் பொரளை – கெம்பல் பூங்காவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால் ரயில்வே திணைக்களத்தை  சேர்ந்தவர்களுடன், பொது மக்களும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்காக அங்கு கூடியிருந்ததால் தடுப்பூசி வழங்குவதை தொடர முடியவில்லை. இதனால் மருதானை ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டது என தெரிவித்தார்.

எனவே, ரயில்வே ஊழியர்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி வழங்கப்பட்டதையடுத்து, எந்தவித இடையூறும் இல்லாமல் தங்கள் சேவையை மீண்டும் தொடங்க அவர்கள் ஒப்புதல் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ரயில்வே கட்டுப்பாட்டு அறையின்படி, பத்து நீண்ட தூர ரயில்கள் இன்று (திங்கட்கிழமை) காலை கொழும்பு கோட்டை நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, திட்டமிட்டபடி கோட்டையில் இருந்து  இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.