July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முள்ளிவாய்க்காலில் சுகாதார ஒழுங்குவிதிகளுடன் நினைவேந்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி

சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடியுமென்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மே 18 இல் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய அந்த நிகழ்வை நடத்துவதற்கு கடந்த வாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் அந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முள்ளிவாய்க்காலில் நிகழ்வுகளை நடத்துவதற்கு 27 பேருக்கு அந்த தடையுத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் இந்தத் தடையுத்தரவுகளை உடன் இரத்துச் செய்யுமாறும், நினைவேந்தல் செய்வதற்கு அனுமதிக்குமாறும் கோரி அதே நீதிமன்றத்தில் இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதனை ஆராய்ந்த நீதிமன்றம் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை நடத்த முடியுமென்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

அந்த நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்த பீற்றர் இளஞ்செழியன் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகமும், முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் சார்பில் சட்டதரணி தனஞ்சயன் தலைமையில் ஏனைய சட்டதரணிகளும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டதரணிகளான சுகாஸ் ,காண்டீபன் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.