January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டல்களை வெளியிட முடிவு

அறிகுறியற்ற கொரோனா நோயாளர்களை சொந்த வீடுகளில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வார இறுதியில் வெளியிடப்படும் என்று கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய அந்த வழிகாட்டல் அடங்கிய சுற்று நிருபம் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் இதன் மூலம் அனைத்து கொரோனா நோயாளர்களும் வீட்டிலிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்பது அர்த்தமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் வைத்தியசாலை மற்றும் கொரோனா சிகிச்சை மைய ங்களில் நிலவும் இடப்பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் சுகாதார தரப்பினர் அறிகுறியற்ற நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்குவது தொடர்பில் ஆலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவார்கள் எனவும் குறைவான அறிகுறிகளை காண்பிப்பவர்கள் இடைநிலை தனிமைப்படுத்தல் மையங்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு கொரோனா தொற்று அறிகுறிகள் அற்ற நோயாளர்கள் வைத்தியர்களின் ஆலோசனையின் கீழ் வீட்டிலேயே இருக்க முடியும் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

எனினும் அறிகுறியற்ற கொரோனா தொற்றாளரை வீட்டில் வைத்து சிகிச்சை அளிப்பதா இல்லையா என்ற முடிவை வைத்தியர்களே எடுப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் இல்லாத கொரோனா நோயாளர்களை சிகிச்சை மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.

இதனிடையே கொவிட் -19 நோயாளிகளை அவர்கள் வசிக்கும் பிரதேசங்களுக்கு அருகிலுள்ள சிகிச்சை மையங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.