கொவிட் நோயாளர்களுக்கு உதவும் வகையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்த 10 நாட்களில் 10,000 கட்டில்கள் வேலைத்திட்டம் நேற்று நிறைவு செய்யப்பட்டது.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டதோடு, இளைஞர், யுவதிகளின் தன்னார்வ முயற்சியில் நிறைவு செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
திட்டத்தின் குறிக்கோளை அடைவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் படையணி முன்னிலை வகித்ததுடன் அதற்கு அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் பங்களிப்பு செய்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
10 நாட்களில் 10,000 கட்டில்கள் வேலைத்திட்டம் கடந்த 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, புதிதாக 16 ஆயிரம் கட்டில்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.