July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக அனுஷ்டிக்க சுமந்திரன் அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தையொட்டி நாளையதினம் (செவ்வாய்க்கிழமை) ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக மக்களை ஒன்றிணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டு கொண்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கவுள்ள நிலையில், கொரோனா வைரஸ் சமூக தொற்றை கருத்தில் கொண்டு சூம் இணையத்தினூடாக ஒன்றிணையுமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மூன்றாம் அலை மிக மோசமாக நாட்டில் பரவியுள்ள நிலையில், இப்படியான கால கட்டத்திலே மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எவ்வாறு நாம் அனுஷ்டிக்க முடியும் என்பது குறித்து சிந்திக்கின்ற போது மக்களை ஒரு இடத்தில் கூடச் செய்வது சமூக பொறுப்பற்ற செயலாகவும் மாறிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இம்முறை நினைவேந்தலை தொழில்நுட்ப ரீதியாக கையாள்வதே சிறந்ததாகும் என கூறியுள்ள அவர், ‘சூம்’ தொழில்நுட்பம் மூலமாக அனைவரும் சேர்ந்து அனுஷ்டிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை ஆறு மணிக்கு வணக்கஸ்தலங்களில் மணி ஒலிக்க விட்ட பிறகு அமைதி பிரார்த்தனையின் பின்னர் 6.15 இல் இருந்து ஒரு மணித்தியாலம் இணைய வழியாக ஒன்றிணைந்து இந்த நினைவேந்தல் தினத்தை நினைவு கூருவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.