நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அறிகுறியற்ற நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்துவது பற்றி தற்போது சுகாதார தரப்பினர் ஆலோசித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும், நோய் அறிகுறிகள் காட்டாத நோயாளர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே அறிவிருத்திருந்தார்.
எனினும் கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பதற்கு போதியளவு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சுகாதார தரப்பினருடன் மேலும் ஆலோசிக்க வேண்டி உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, எதிர்காலத்தில் அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளை சரியான மேற்பார்வையின் கீழ் வீட்டில் வைத்து கண்காணிப்பதற்கான தொடர்ச்சியான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.