November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள கொங்கோ அரசுடன் இலங்கை பேச்சுவார்த்தை

இலங்கையில் தட்டுப்பாடாக உள்ள ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகளை பெற்று கொள்வது குறித்து கொங்கோ அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றது.

கொங்கோ அரசாங்கத்திடம் 13 இலட்சம் ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகள் மேலதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இந்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில்  கொவிட் -19 வைரஸ் தடுப்பூசியாக ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசியை 1வது டோஸாக ஏற்றிக்கொண்டவர்களில் ஆறு இலட்சம் பேருக்கு 2வது டோஸ்  தடுப்பூசி ஏற்றுவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு  ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’  தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு நாடுகளிடம் பேசி வருகின்றது.

குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகளில் ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகளில் ஒரு தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என்ற விதத்தில் இலங்கை தரப்பு கூறி வந்தாலும் தற்போது வரையில் உறுதியான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் கொங்கோ அரசாங்கத்திடமும் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொங்கோவிலும் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களுக்கு ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் 13 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் மேலதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மேலதிகமாக உள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளில் இலங்கைக்கு தேவைப்படும் எண்ணிக்கையோ அல்லது ஒரு குறிப்பிட்ட தொகை ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கடிதம் மூலம் அறிவித்துள்ளார் எனவும் கொங்கோவில் உள்ள இலங்கை தூதரகம் மூலமாக இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.