
அறியப்படாத வாட்ஸ்அப் கணக்குகளிலிருந்து செய்திகள் வந்தால் அதற்குப் பதிலளிக்க வேண்டாம் என்று இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணையக்குழு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வாட்ஸ்அப் மூலமாக மோசடிகள் இடம்பெற்று வருவதால் தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணையக்குழு பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தவறுதலாக அனுப்பப்பட்டதாகத் தெரிவித்து 6 இலக்க குறியீட்டைக் கொண்டு ஒரு வாட்ஸ்அப் செய்தி இவ்வாறு அனுப்பப்படுவதாகவும் இவ்வகையான செய்திகளை பெறுபவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டாம் எனவும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
சில வேளைகளில் இது போன்ற தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களின் வாட்ஸ்அப் இலக்கங்களிலிருந்தும் அனுப்பப்படலாம் என்றும், இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களின் கணக்கு வேறு நபரினால் கையாளப்பட்டிருக்கலாம் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே இது குறித்து அவருக்குத் தெரியப்படுத்துவதுடன், உங்களுடைய கணக்குகளை வேறு ஒருவர் பயன் படுத்த முடியாத வகையில் வாட்ஸ்அப் பாதுகாப்பு அம்சங்களை (two-factor authentication) செயற்படுத்திக் கொள்ளுமாறும் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணையக்குழு அறிவுறுத்தியுள்ளது.