வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ள (பயோ பபுல்) பயணப் பாதுகாப்பு வளையம் மூலம் நாட்டில் குறிப்பிட்ட சுற்றுலாத்தளங்களுக்கு பயணிக்க முடியும் என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் தம்மிக விஜேசிங்க சுட்டிக்காட்டுகிறார்.
ஏற்கனவே நாட்டிற்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கும் மாகாணங்களுக்கு, பயணப் பாதுகாப்பு வளைய முறையின் கீழ் பயணிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர நடவடிக்கை எடுக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சுற்றுலாப் பயணிகளுடன் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுற்றுலாப் பயணப் பாதுகாப்பு வளையத்தை கடந்து வெளித்தொடர்பை மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் தம்மிக விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.